Free Support +91 44 28482818 - 10.00 AM - 5.00 PM
free shipping
Order Books above Rs.500

ரெயினீஸ் ஐயர் தெருவின் வழியே...

22 March 2018
ரெயினீஸ் ஐயர் தெருவின் வழியே...

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி தீரவாசத்தில்தான் எனக்கு எதிர்காலம் என்பதை அறிந்திருக்கவில்லை. கோவில்பட்டி கரிசல் காட்டிலிருந்து திருநெல்வேலிச் சீமைக்கு வந்தவுடன், எங்கே வீடு பார்ப்பது என்றவுடன் மனதில் தோன்றியது, கல்லூரிக் காலங்களில் மனதை ஈர்த்த வண்ணநிலவன் நாவலான ரெயினீஸ் ஐயர் தெருதான்.

அந்தத் தெருவில், இப்போது டாரதிக்குப் பதில் ஒரு லூர்து இருக்கலாம். இடிந்தகரையாளுக்குப் பதிலாக முன்னீர்பள்ளத்துக்காரி யாரேனும் இருக்கலாம். வேறொரு இருதயம் டீச்சர் இருக்கக்கூடும். அன்ன மேரிக்கள்கூட இருக்க வாய்ப்புண்டு. நமக்குத் தோதான வீடு அமையுமா அங்கே என்று எண்ணம் ஓடியது. மேலும், அது ஒரு கற்பனையான தெருவாக இருக்கவும் கூடும் என்றும் நினைத்தேன். பிறகு, சமாதானபுரத்தில் வீடு பார்த்து வந்துவிட்டேன். ஒரு மழைக் காலப் பொழுதில், பெருமாள்புரத்தில் இலக்கிய இணையராகத் திகழ்ந்த சரோஜினி பாக்கியமுத்து, டேவிட் பாக்கியமுத்து ஆகியோருடன் தேநீர் குடித்துக்கொண்டிருக்கும்போது, இரேனியஸ் என்ற மிஷனரி யைப் பற்றி அவர்கள் பேசப் பேச கண்கள் விரிந்தன. வண்ணநிலவன் எழுதிய அதே ரெயினீஸ் ஐயர்தான்.

தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவர்கள் என்று சொல்லும்போது கால்டுவெல்லையும், ஜி.யு.போப்பையும்தான் சொல்வார்கள். அவர்களுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பிரஷ்ய நாட்டிலிருந்து வந்த இரேனியஸ் அடிகளார் (1790 - 1838 ). 48 ஆண்டுகளே வாழ்ந்த இரேனியஸ், நெல்லைச் சீமையில் இருந்த 18 ஆண்டுகளில் சுமார் 107 கல்வி நிறுவனங்களைத் துவக்கியவர் என்பது பலருக்கும் வியப்பை அளிக்கும். தாய்மொழியில்தான் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதில் இரேனியஸ் உறுதியாய் இருந்தார். எங்கு தேவாலயம் கட்டினாலும், அருகில் ஒரு துவக்கப்பள்ளி துவங்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயலாற்றினார். நெல்லையில் திருப்பாற்கடல்நாதன் என்ற கவிராயரிடம் தமிழ் கற்றார். விநோதம் என்னவெனில், திருப்பாற்கடல்நாதனுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், தமிழைத் தமிழ் மரபிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இரேனியஸுக்குக் கிடைத்தது.

அவர் காலத்திலேயே திருநெல்வேலியில் மாணவர் களுக்கிடையே சாதிப் பிரச்சினை இருந்தது. 1820-ல் மூடப்பட்டிருந்த மாணவர் விடுதியைப் பேச்சுவார்த்தை நடத்தித் திறந்தவர் இரேனியஸ் அடிகளார். எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதில் இவர் உறுதியாய் இருந்தார். இது மேலிடத்துக்குப் பிடிக்கவில்லை. 1832-ல், காலரா நோய்க்கு நெல்லை மாவட்டத்தில் பலர் உயிரிழந்தனர். அறியாமையால் பலர் இறந்தது இரேனியஸ் அடிகளாருக்குத் துயரத்தை உண்டுபண்ணியது. 1832-ல், பூமி சாஸ்திரம் என்ற 750 பக்க அறிவியல் நூலை எழுதினார். தமிழின் முதல் அறிவியல் நூல் என்று சொல்லப்படு கிறது. தமிழ்மொழி இலக்கணம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

‘கைம்பெண்கள் சங்கம்’ தோற்றுவித்து, விதவைப் பெண்களைப் பாதுகாக்க ஒரு நிதியமைப்பை உருவாக்கினார். இன்றைய குடும்ப ஓய்வூதியத் திட்டத்துக்கு அதுவே முன்னோடி என்று சொல்லப்படுகிறது. 1835-ல், லூதரன் திருச்சபை இவருடன் இருந்த தொடர்பை முறித்துக்கொண்டது. தனித்து விடப்பட்டார் இரேனியஸ். பின்பு சென்னை சென்றாலும், நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் நெல்லை வந்தார். தமது பணிகளைத் தொடர்ந்தார்.

1838-ல், இரேனியஸ் அடிகளார் இறந்தபோது, அவரைப் புதைக்கக் கல்லறைத்தோட்டத்தில் இடம்தராததால், சாலையோரத்தில் புதைக்கப்பட்டார். காலம் மகத்தானது. அவர் மறைந்து 180 ஆண்டுகள் கடந்த நிலையில், 107 கல்விச்சாலைகளை திருநெல்வேலிச் சீமையில் துவக்கிய இரேனியஸ் அடிகளாரின் கல்லறையே இன்று அழகுறக் காட்சியளிக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏனைய மிஷனரிகள் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் இப்போது புதர் மண்டிக் கிடக்கிறது. வண்ணநிலவனும் இரேனியஸ் அடிகளாரும், விதவையான அன்னமேரியும் ஒரு புள்ளி யில் இணைகிறார்கள் என்பதுதான் எவ்வளவு பெரிய விநோதம்!

- இரா.நாறும்பூநாதன்,
தொடர்புக்கு: narumpu@gmail.com

நன்றி: தமிழ் இந்து
http://tamil.thehindu.com/general/literature/article23278037.ece

Add Comment